மயிரிழையில் தப்பித்தான் (Narrow Escape)
Description
அன்று எருசலேம் நகரம் பரபரப்பாக இருந்தது “அவனை முடித்துவிட்டோம்” என்று மதிகெட்ட சிறு கூட்டம் கொக்கரித்தது. பெண்கள் கூட்டமோ அழுது புலம்பி தவித்தது . கொல்கதா மலையில் இயேசு சிலுவையில் அறையப்பட்டிருந்தார். ஒருமுறை அவரைப் பார்த்தவர்கள் மறுமுறை அவரைப் பார்க்க முடியாது. அவ்வளவு அகோர பாடுபட்டு இரத்த வெள்ளத்தில் நனைந்திருந்தார். வாரினால் அடிபட்டுஇருந்த அந்த உடம்பை இளகியமனம் கொண்டோர் மறுபடி பார்க்க துணியமாட்டார்கள். மூச்சுவிட அத்துணை சிரமம் । வேதனையின் உச்சக்கட்டத்தை அனுபவித்துக் கொண்டுஇருந்தார் இயேசு. அப்போது நடைபெற்ற இரு சம்பவத்தை பார்ப்போம்.
இருகுற்றவாளிகளின் இருவித மனநிலை
:
அங்கு அவரையும் அவருடைய வலதுபக்கத்தில் ஒரு குற்றவாளியையும், இடது பக்கத்தில் ஒரு குற்றவாளியையும் சிலுவைகளில் அறைந்தார்கள். அன்றியும் அறையப்பட்டிருந்த குற்றவாளிகளில் ஒருவன்; நீ கிறிஸ்த்துவனால் உன்னையும், எங்களையும் இரட்சித்துக்கொள் என்று அவரை இகழ்ந்தான் (லூக்கா 23:34,39)
தவறு செய்து தண்டனை அனுபவித்து கொண்டிருந்தும் அவன் அகங்காரம் , ஆணவம் குறையவில்லை. பொருமையினால் பிரதான ஆசாரியர் இயேசுவை நிந்தித்தனர், ஒப்புக்கொடுத்தனர்(மாற்கு 15:9) தன்னை தேவகுமாரன் என்று இயேசு சொன்னதினால் தேவதூஷணம் சொல்கிறார் என்று தவறாக புரிந்து கொண்டு சிலர் நிந்தித்தனர் ஆனால் குற்றவாளியாகிய இவனுக்கு என்ன வந்தது ? "ஏசுவே என்னை ரட்சியும் என்று அவரிடம் கேட்பதற்கு பதிலாக 'நீ கிருஸ்த்துவனால் உன்னையும், எங்களையும் இரட்சித்துக்கொள் என்கிறான், இந்த வேதனைநிறைந்த நிலையிருந்துதான் காப்பாற்றப்பட வேண்டும் என்ற ஆசை இருக்கிறது, ஆனால் அதை பணிவாக கேட்க்கவில்லை இயேசு ரட்சகர் என்றோ குற்றமற்றவர் என்றோ விசுவாசிக்கவில்லை."
ஆண்டவரை பார்த்து சவால் விட்டால் ஒருவேளை உடனே அவர் தானும் சிலுவையைவிட்டு இறங்கி அவனையும் சிலுவையைவிட்டு இறக்கிவிடுவார் என்று நப்பாசை கொண்டானோ தெரியவில்லை. சாத்தானின் எதிர்பார்ப்பு இவர் சிலுவையைவிட்டு இறங்கி விட்டால் ரட்சிப்பின் பணி தடைபட்டு விடாத என்பதுதான், தனக்கு உதவி தேவைப்பட்டபோதும் தன் தவறுக்கு தண்டனையை அனுபவிக்கும்போதும் கூட அவனுக்கு குற்றவுணர்வு தாழ்மை ஏற்படவே இல்லை, "அழிவு வருமுன் மனுஷனுடைய இருதயம் இறுமாப்பாயிருக்கும்; மேன்மைக்கு முன்னானது தாழ்மை।"(நீதி 18 :12) என்று வேதம் கூறுகிறது.
திருந்திய குற்றவாளி
மற்றவனும் இதுவரை குற்றவாளிதான், ஆனாலும் அவன் இப்பொழுது உணர்வடைந்தான் , இயேசுவிடம் மன்னிப்பு பெற விரும்புகிறான் , இப்பொழுது அவன் பேசுவதை கேளுங்கள் "மற்றவன் அவனை நோக்கி : நீ இந்த ஆக்கினைக்குஉட்பட்டவனாயிருந்தும் தேவனுக்குப் பயப்படுகிறதில்லையா?
நாமோ நியாம்படி தண்டிக்கப்படுகிறோம் ; நாம் நடப்பித்தவைகளுக்குத்
தக்க பலனை அடைகிறோம் ; இவரோ தகாததொன்றையும் நடப்பிக்கவில்லையே என்று அவனைக் கடிந்துகொண்டு , இயேசுவை நோக்கி ; ஆண்டவரே, நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும் என்றான் (லூக்கா :40 -42)
இவன் வார்த்தைகள் மிகுந்த ஆச்சரியத்துக்கு உரியவைகள், தண்டனைபெறும் பெரும் உனக்கு தேவபயமில்லையா என்று கேட்கிறான்., தேவன் நம்மைத் தண்டிப்பது நாம் திருந்த வேண்டும் என்பதற்குத்தான்
தன்குற்றத்தை ஒப்புக் கொள்கிறான்
நாமோ நியாயப்படி தண்டிக்கப்படுகிறோம்; நாம் நடப்பித்தவைகளுக்கு தக்க பலனை அடைகிறோம், தன் குற்றத்தை ஒப்புக் கொள்கிறான் , இயேசு தவறு செய்யாதவர் குற்றமற்றவர் என்பதையும் அறிக்கையிடுகிறான் "தன் பாவங்களை மறைகிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கைசெய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான் (நீதி 28 :13 ) என்ற வேத வசனத்துக்கு ஏற்ப இவன் ஆண்டவரிடம் இரக்கம் பெற்றான் "
அவனுக்கு கிடைத்த பெரிய வெளிப்பாடு
"இயேசுவை நோக்கி: ஆண்டவரே, நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும் என்றான்"(லூக்கா23:42) இயேசுவிற்கு ஒரு ராஜ்யம் உண்டு அந்த ராஜ்யத்தை அவர் ஆள வருவார் என்பது எவ்வளவு பெரிய வெளிப்பாடு. கூடவே இருந்த சீஷர்கள்கூட இந்த சத்தியத்தை அவர் உயிர்த்தமுன்வரை அறியவில்லை, ஆனால் எங்கோ தொலைதூரத்தில் அவ்வப்பொழுது இயேசுவின் பிரசங்கத்தைக் கேட்ட இவன் (இல்லாவிட்டால் இவளவு பெரிய அறிக்கை செய்ய முடியாது) இவ்வளவு பெரிய வெளிப்பாட்டை பெற்று விசுவாசித்தது மிகவும் ஆச்சரியமான காரியம்.
வெளியே குற்றவாளி உள்ளே விசுவாசி
உலகம் அவனை குற்றவாளி என்று நியாயந்தீர்த்தபொழுது இயேசு அவனை விசுவாசியாக கண்டு "அவனை நோக்கி: இன்றைக்கு நீ என்னோடேகூட பரதேசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்கு சொல்லுகிறேன் என்றார் "(லூக்கா 23:43) நரகத்தின் விளிம்பை நேருங்கிய ஒருவன் தன் மிகப்பெரிய விசுவாசத்தினால் பரலோகில் நுழைந்துவிட்டான் நரகத்திற்கு மயிரிழையில் தப்பித்தான்.
ஞானஸ்நானம் பெற மறுக்கும் சிலர் இந்த கள்ளனைப் போன்று தாங்களும் ஞானஸ்நானம் பெறாமலே பரலோகத்திற்கு சென்றுவிடுவோம். ஞானஸ்நானம் அவசியம் இல்லை என்று தர்க்கம் செய்வார்கள் அப்படியானால் தாங்களும் கள்ளர்கள்தான் என்று மறைமுகமாக கூறுகிறீர்களா? அவனுக்கு கொடுத்த வாக்குரிமையை ஆண்டவர் இவர்களுக்கு நேரடியாக கொடுத்தாரா? அவன் தவறான வழியில் வாழ்ந்தபோது அவன் உள்ளம் சத்தியத்திற்கு ஏங்கியது. உலகம் சமாரியப் பெண்ணை முறைதவறிய பெண் என்று குற்றம் சாட்டியது அவள் உள்ளமோ ஆண்டவரை தொழ வாஞ்சித்தது. உள்ளிருத்தியங்களை ஆராய்ந்து அறிகிற கர்த்தர் இருவருக்கும் தன்னை வெளிப்படுத்தினார். மேலும் இயேசு பரமேறும்முன்"ஆகையால் , நீங்கள் புறப்பட்டு போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்து நான் உங்களுக்கு கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம்பண்ணுங்கள் ।என்றார் " (மத் 28 :19 -20 ) இப்படி தெள்ள தெளிவாக இயேசு கூறியிருக்கும் அந்த சத்தியத்திற்கு கீழ்ப்படிய மறுப்பது எப்படி சரியாகும். ஞானஸ்நானம் தேவையே இல்லாத இயேசு தாமே ஞானஸ்நானம் பெற்றிருக்க நாம் அவரை விட பெரிய நீதிமான்களா?
நரகத்தின் வாசலை நோக்கி நடந்த அவன் தன் பாதையை மாற்றினான் பரலோக வாசலுக்குள் நுழைந்தான். தேவ கிருபையால் மயிரிழையில் அவன் நரகத்திற்கு தப்பினான், அவன் வாழ்வின் அந்தி பொழுது சாய்ந்தபோது அவன் ஆவிக்குரிய வாழ்வில் விடியல் விடிந்தது. எல்லோருக்கும் இப்படி சமயமும் சந்தர்ப்பமும் வாய்க்காது, எனவே இன்றைக்கே மனந்திரும்புவோம்.
"…இதோ, இப்பொழுதே அநுக்கிரககாலம், இப்பொழுதே இரட்சணிய நாள்" (2 கொரி 6 :2)"
செல்வி. பி. அன்னாள் காமாட்சி